×

கெங்கவல்லி அருகே சமரசம் பேச சென்ற எஸ்ஐயை தாக்க முயற்சி

கெங்கவல்லி, டிச.3: கெங்கவல்லி அருகே வாய்கால் தகராறில் சமரசம்  பேச சென்ற எஸ்ஐயை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கெங்கவல்லி பேரூராட்சி, நடுவலூரில் வாய்க்காலுக்கு வரும் தண்ணீரை செம்படகுட்டை பகுதி மக்கள் குட்டையில் சேகரித்து வைத்தனர். இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், நடுவலூர் பகுதி விவசாயிகள், கடந்த 30ம் தேதி கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் (பொ) ராமாண்டவர், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலக்குமரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து, செம்படகுட்டை பகுதி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடுவலூருக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால், கடந்த 2 நாட்களாக அங்கிருந்து நடுவலூர் வாய்க்காலுக்கு தண்ணீர் வந்தது.

இந்நிலையில், நேற்று செம்படகுட்டை பகுதி விவசாயிகள், தண்ணீரை மீண்டும் தடுத்து, குட்டையில் சேகரித்தனர். இதனால் நடுவலூர் விவசாயிகளுக்கும், செம்படகுட்டை விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த கெங்கவல்லி எஸ்ஐ சேகர், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால், அங்கிருந்த விவசாயிகள் எஸ்ஐயை தாக்க முயன்றனர். இதுகுறித்து அவர் கெங்கவல்லி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் 10க்கும் மேற்பட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க 5 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : SI ,Kengavalli ,
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது